மூளையின் ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி, பக்கவாதம் ஏற்படாமல் காப்பாற்றிய ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்களை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டினார்.
சென்னையை சேர்ந்தவர் பிரதாப் 36. கடந்த ஜன., 24ல் இடது பக்க கை மற்றும் கால் பலவீனத்துடன், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்கவாதம் ஏற்பட்டு மூன்று மணி நேரத்திற்குள் அழைத்து வந்ததால், உறைந்த ரத்தத்தினை அகற்றும் சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்தனர்.
அதன்பின், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை, நரம்பியல் துறை தலைவர் பூபதி, நுண்துளை நரம்பியல் கதிரியக்க சிகிச்சை நிபுணர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக முழுமையாக அகற்றினர். இச்சிகிச்சைக்கு பின் குணமடைந்த நோயாளி, மறுநாள் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் முதன் முறையாக பக்கவாத நோயாளிக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, அமைச்சர் சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் விமலா, ஒருங்கிணைப்பு அலுவலர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கு, 78 அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வசதிகள் உள்ளன. கடந்தாண்டு ரத்த உறைதலினால் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டு, அரசு மருத்துவமனைகளில் 14 ஆயிரத்து, 784 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல், ரத்தக் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டு 4,858 பேர் சிகிச்சை பெற்றனர்.
இதில் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் 314 பேர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பக்கவாதம் பாதித்தவர்களுக்கு, முதல் நான்கு மணி நேரம் மிக முக்கியம் என்பது குறித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment